காதலின் மீதியோ நீ-21

காதலின் மீதியோ நீ-21

காதலின் மீதியோ நீ-21

ஜெகன்னாத் மீண்டும் தனது கர்ஜனையான குரலில்”ஆயுஷ் அவளைக் கூட்டிட்டுப் போய் அந்தக் கருவைக் கலைச்சிடு.போயும் போயும் குப்தா வீட்டுக்கு ஒரு தெருநாய்மாதிரி ஒருத்தி மருமகளாக வந்திருக்காள். அவளையாவது விரட்டிவிட்றுவேன். ஆனால் அவள் வயித்துல என் குடும்பத்துக் குழந்தை வளரக்கூடாது.அதை போய் அபார்ஷன் பண்ணிடுங்க முதல்ல”என்று சொன்னார்.

அதைக்கேட்டதும் நித்ரா சத்தமாக அழுதாள்”ஏன் பிரீத்தா இந்த விசயத்தை நீங்களா கண்டுப்பிடிச்சு சொன்னீங்க? என் குழந்தையை வயித்துல தாங்குற எனக்குத் தெரியாதா என் குழந்தையை எப்படிப் பெத்தெடுக்கணும்னு. அதை வெளிய சொல்லணுமா வேண்டாமான்னு நானே முடிவு செய்வனே.யாருக்கும் தெரியாமல் வைச்சிருந்தனே இப்படி வெளியே சொல்லீட்டீங்களே.உங்கப்பாவுக்கு பயந்துதானே என் குழந்தையைப் பத்திரமாகப் பாதுகாத்து வைச்சிருந்தேன்”என்று கதறி அழவும் பூர்வீ முதற்கொண்டு எல்லோருக்குமே அதிர்ச்சி.

அடுத்து என்ன நடக்குமென்று யாருக்கும் எந்த யூகமும் இல்லாது அப்படியே அமைதியாக இருந்தனர்.

அதைக் கேட்டதும் பிரீத்தா அதிர்ந்து வாயில் கை வைத்தவள்” நீங்க உண்மையிலே கர்ப்பமாக இருக்கீங்களா? சத்தியமா நான் இதை எதிர்பார்க்கல. நான் சும்மா இந்த விஷயம் சொன்னால் எங்க டாடி எப்படி ரியாக்ட் பண்ணுவாரு .அவருடைய ஒரிஜினல் முகம் வெளியே வரும்னுதான் நான் அப்படிச் சொன்னேனே தவிர உண்மையாகவே நீங்க கர்ப்பமாக இருப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்ல” என்று சொன்னவளுக்கு கண்கள்கலங்கியது.

பிரீத்தாவுக்கே இப்படியென்றால் அவள் பேசியதைக் கேட்ட ஆயுஷிற்கு எப்படி இருந்திருக்கும்?

நித்ரா உண்மையிலயே கர்ப்பமாக இருக்கிறாள். அதை அவள் யாரிடமும் சொல்லாமல் மறைத்திருக்கிறாள்.அதுவும் நம்ம அப்பாவுக்கு பயந்துதான் சொல்லவேயில்லை என்று அவள் கதறும்போது அவன் மனம் என்ன பாடு பட்டிருக்கும்?

தனது வயித்தில் கைவைத்துக்கொண்டு கதறியழும் மனைவியின் முகத்தைத் தாங்கியவன் தன் நெஞ்சோடு அவளைப்பிடித்து வைத்து அழுத்தி அவளது தலையில் தனது முகத்தை வைத்து சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தான்.

இப்போதைக்கு அவனால் எதையுமே பேசமுடியாது.ஒன்று சந்தோசமான அதிர்ச்சி. இன்னொன்று படுபயங்கரமான அதிர்ச்சி.

சிறிது நேரம் கழித்து ஆயுஷ் நித்ராவைவிட்டு எழுந்திருக்கவும் அவனது கையைப்பிடித்தவள்”என் குழந்தையை தயவு செய்து அழிச்சிடாதிங்க. நான் நீங்க என்ன சொன்னாலும் கேட்டுக்கிறேன். ப்ளீஸ்”என்று அவனிடம் இறைஞ்சினாள்.

“என் குழந்தையை அழிச்சிடாதிங்கன்னு என்கிட்டயே கெஞ்சிறளவுக்குத்தான் என் வாழ்க்கை இருந்திருக்கு என்ன?”என்று தனது முகத்தை அழுந்தத் துடைத்தவன் குப்தாவிடம் திரும்பினான்.

“டாடீ உங்கக்கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கலை. ஏன் இப்படி சொல்லுறீங்க. என் குழந்தையை அழிக்க சொல்லுறளவுக்கு என்ன கோபம்?”என்று நிதானமாகக் கேட்டான்.

அதற்குப் பதில் நித்ரா சொன்னாள்”அவர் உங்கக் குழந்தையை மட்டுமில்ல இன்னும் கொஞ்சநாள் உங்களோடு நான் சேர்ந்து வாழ்ந்தால் என்னையவும் சேர்த்து அழிச்சிடுவாரு. அதை நான் சொன்னால் நீங்க நம்பமாட்டீங்க ஆயுஷ்”என்று விரக்தியோடு சொன்னாள்.

“என்ன?”என்று ஒட்டுமொத்தக் குடும்பமும் அவளைத்தான் பார்த்தனர்.

நித்ரா இப்போது மெதுவாக எழுந்தவள் “நான் இதை என் உயிரைக் காப்பாத்தவோ இல்லை எனக்காகவோ நடந்த உண்மையைச் சொல்லலை.நான் காதலிச்சு இவருக்கூட சந்தோசமா வாழ்ந்ததுக்கு அடையாளமாக எந்த பாவமும் செய்யாமல் என் வயித்துல ஐந்து மாசமா வளருதே என் குழந்தைக்காக இப்போ தைரியமாக வெளியே சொல்லுறேன்.

ஐஞ்சு மாசமாவா? இவங்களுக்கு கல்யாணம் முடிந்தே மூணுமாசம்தானே ஆகுது என குடும்பத்தார் யோசிக்க ஆயுஷோ அப்போவேவா! என்று அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தான்.

“ஆயுஷ் நீங்க நேத்து நைட்டுக்கூட கேட்டீங்களே?என்னை வேண்டாம்னு இன்னொருத்தனைக் கல்யாணம் பண்ணிட்டுப் போக உனக்கு எப்படி மனசு வந்துச்சுன்னு?அதுக்கும் இப்போ நடக்கிற எல்லா பிரச்சனைக்கும் ஒரே காரணம் உங்கப்பாதான்.

இது வரைக்கும் நிறைய மிரட்டியிருக்காரு. நானும் பயந்திருக்கேன்.ஆனால் என் குழந்தையைக் கொல்ல எவனையும் அனுமதிக்கமாட்டேன்” என்று தைரியமாக எதிர்த்து நின்றாள்.

அதைக்கேட்டு ஆயுஷ் “டாடீ உங்களைப் பத்தி நேத்தே எனக்கும் பிரீத்தாவுக்கும் சந்தேகம் வந்துட்டு.அதை ஊர்ஜிதம் பண்ணத்தான் நினைச்சோம். உண்மையை சொல்லுங்க நித்ராவையும் என்னையும் பிரிக்க நீங்கதான் சைலண்டா திட்டம் போட்டு எல்லாத்தையும் நடத்துனீங்களா?”

திட்டம்போட்டு நடத்தலை. மிரட்டினாரு. கொலை மிரட்டல் எப்படித்த தெரியுமா கொடூரமா என்று மூன்று மாதத்திற்கு முன்பு நடந்ததை நித்ரா சொன்னாள்.

மூன்று மாதங்களுக்கு முன்பு ஆயுஷும் நித்ராவும் அவ்வளவு நெருக்கமாக காதலித்துக் கொண்டிருந்தார்கள்.அவர்களுக்கு பதிவு திருமணமும் முடிந்து விட்டது என்பதால் நித்திராவுக்கு எந்த விதமான பயமும் ஆயுஷைப் பத்தி இல்லாது சந்தோஷமாக இருந்தாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மித்ராவின் மகளை தூக்கிக் கொண்டு வழக்கம் போல போகும் கடைக்கு போய் இருவரும் ஐஸ்கிரீம் வாங்கிக்கொண்டு கையில் எடுத்துக் கொண்டு சந்தோஷமாக வந்து கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் திடீரென்று அவளுக்கு முன்பாக வந்து நின்ற காரில் இருந்து நான்கு பேர் வேகமாக இறங்கி வந்து அவளையும் குழந்தையும் இழுத்துக் காருக்குள் போட்டு கடத்திக் கொண்டு சென்றனர்.

இருவரையும் காருக்குள் அடைத்தவைத்து எங்கோ கொண்டு சென்றார்கள்.அவளை சுற்றிலும் நான்குப் பெரிய பெரிய தடிமாடு போன்ற ரவுடிகள் கையில் பெரிய பெரிய கத்தியுடன் இருந்தார்கள்.

அவள் மட்டுமே இருந்திருந்தால் கூட என்னை ஏதென்று கேட்டிருப்பாள்.ஆனால் கையில் குழந்தையோடு இருக்கிறாள் என்பதாலும் அவர்கள் கையில் பெரிய பெரிய பயங்கரமான ஆயுதம் இருந்ததாலும் பயந்து அமைதியாக அவர்களையே பார்த்திருந்தாள்.

யார் இவர்கள்? எதற்காக நம்மை கடத்தினார்கள்? என்று எதுவும் தெரியாமல் அதனால் சத்தமிடாது மெதுவாக பயந்து போய் குழந்தையை தன்னுடைய நெஞ்சிலே அணைத்துக் கொண்டு கோழிக்குஞ்சு போல பயந்து உட்கார்ந்து இருந்தாள்.

கார் எங்க போகுது? எங்க நிக்குது? என்று எதுவும் தெரியாத கண்ணீர் வர வர பயந்து போய் குழந்தை அழ ஆரம்பிக்கவும் சமாதானப்படுத்தியவள் அந்த இறுக்கமான சூழ்நிலையில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அவளை அந்த காரிலே வைத்து சுற்றிக் கொண்டிருந்தனர்

ஒருகட்டத்திற்கு மேல் குழந்தை அழுது அழுது தூங்கியேவிட்டது அவளும் அப்படியே மயங்கிவிட்டாள்.

இப்போது அவள் முகத்தில் தண்ணீர் தெறித்து விழவும் கண்ணை முழித்து பார்த்தாள் அங்கே குப்தா எதிரே உட்கார்ந்திருந்தார்.

அதுவும் காருக்குள்ளே தான் இருந்தார்.அவரைப் பார்த்தும் சார் என்று அவர் காப்பாற்ற வந்திருக்கிறார் என நினைத்து அருகில் செல்லப் போனவளை கைக்காட்டி உட்காரு என்று எச்சரித்தார்.

அவர் தனது ஆபிஸில் இருக்கும் ஜெகன்நாத் குப்தா என்கிற சாந்தமான மனுசனாக இருக்கவில்லை அவரது கண்களில் ஒரு வெறியிருந்தது.சாந்தம் இல்லை என்று உணர்ந்தாள்.

ஐயோ எங்க பாப்பா எங்கே?என்று சத்தம்போட்டு அழுதவாறே அங்கேயும் இங்கேயும் தேடிப்பார்த்தாள்.

குப்தா பக்கத்திலிருந்து ஒரு ரவுடியின் கையில் குழந்தைத் தூங்கிக் கொண்டிருந்தது. அதை பார்த்ததும் கொஞ்சம் நிம்மதியானவள் குழந்தை வாங்கப் போனாள் ஆனால் குழந்தையை அவர்கள் அவளது கையில் கொடுக்கவில்லை.

உடனே குப்தாவிடம் “என்ன சார் நடக்குது இங்க? இந்த ரவுடி எல்லாம் எங்களை கடத்தி இருக்காங்க? நீங்க வேற இங்க உட்கார்ந்து இருக்கீங்க .உங்களுக்கும் அவங்களுக்கும் என்ன சம்பந்தம்? நீங்கதான் எங்களைக் கடத்த சொன்னீங்களா?ஏன் சார்?”என்று பாவமாகக் கேட்டாள்.

“ஏய் பாகல் லடிக்கி.என்கிட்ட மாசச் சம்பளத்துக்கு வேலைக்கு இருக்கும் உனக்கு என் மகன் வேணுமா?வந்த ஒரு மாசத்துக்குள்ளாகவே என் மகனை மடக்கிக் காதலிக்கிற.உனக்கு எவ்வளவு பேராசை இருக்கணும். ரோட்டுல கிடக்கிற நாய் நீ உனக்கு என் மகன் ஆயுஷ் கேட்குதா? உன்னை இப்பவே துண்டுத் துண்டா வெட்டி வீசிடுவேன். ஆனால் என் மகன் அப்புறம் தேடுவானே.அதனால்தான் உன்னைச் சும்மா விட்டு வைக்கிறேன். அவனைக் காதலிக்கிறதை இத்தோடு நிறுத்திக்கோ. இதுக்கும் மேலாக அவனைப் பார்த்தேன் பேசுனேன்னு இருந்துச்சு உன்னை மட்டுமில்ல அவன் கையில வச்சிருக்கானே அந்த குழந்தை உட்பட எல்லாரையும் வெட்டி வீசிடுவேன்.நீங்க இருந்த இடமே தெரியாம போயிரும் பாக்குறியா பாக்குறியா” என்று மிரட்டிய டக்கென்று பக்கத்திலிருந்வன் கையில் இருந்தக் குழந்தையை வாங்கி வெட்டுவதற்குப் போனார். அவ்வளவுதான் அப்படியே நித்ரா அவரது காலில் விழுந்து விட்டாள்.

“சார் நானும் ஆயுஷும் உயிருக்குயிரா காதலிக்கிறோம் சார் நான் நேசிக்கிறதை விட நூறு மடங்கு அதிகமா உங்க மகன் என்னை நேசிக்கிறாங்க சார் .நான் இல்லாம அவரால் இருக்க முடியாது. அவர் இல்லாமே என்னால் இருக்க முடியாது. தயவு செய்து எங்களை பிரிக்காதீங்க சார் என் அக்கா குழந்தையை விட்றுங்க சார்” என்று கதறினாள்.

இங்க பாரு இந்த காலில் விழறது, கதறி அழுறது, கெஞ்சுறது இதுல எல்லாம் நான் மனசு இறங்க மாட்டேன். ஏனென்றால் நான் பாரம்பரியமாவே தொழில் முறையில இதையெல்லாம் பார்த்து வளர்ந்தவன். நான் வெளிய பார்க்கத்தான் சாது ஆனால் உள்ள ஒரு காட்டு மிருகமே இருக்கு. நீ என்ன சொன்னாலும் நான் உங்களோட காதலுக்கு சம்மதம் சொல்ல மாட்டேன். என் மகனை விட்டு விலகி போறன்னா உன் குடும்பத்தைச் சும்மா விடுவேன். இல்லையா இந்த நிமிஷமே ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொன்னு நாசம் பண்ணிடுவேன். நீங்க மட்டும் என் கையில மாட்டல உங்க அக்காவோட இன்னொரு குழந்தையும் என் ஆட்கள் கிட்டத்தான் இருக்கு. நீ இப்போ என் மகனைவிட்டு விலகி போறதுக்கு சம்மதிக்கலன்னா ரெண்டு குழந்தையும் ஒரே நேரத்துல கொன்னு போட்டிருவேன். அடுத்தடுத்து உன் குடும்பம் மொத்தத்தையும் இல்லாம பண்ணிருவேன்”என்று மிகக்கொடூரமான முறையில் மிரட்டினார்.

அவர் கையில இருக்கும் தனது அக்கா மகளின் உயிரைவிடவும் இப்போது தனது காதல் முக்கியமில்லை என்று உணர்ந்தவள் “சரி சார் நீங்க என்ன சொன்னாலும் கேட்டுக்குறேன்” என்று தலையாட்டிச் சொன்னவள் தனது கண்களை மூடிக்கொண்டு கதறி அழுதாள். அந்தக் கதறல் எதுவும் குப்தாவின் காதிற்குள் போகவேயில்லை.

“இதுல ஏதாவது ஏமாத்தணும்னு நினைச்ச அடுத்த நொடியே உன் வீட்டுல இருக்கிற மொத்தபேரையும் அடிச்சு தூக்கிருவேன்” என்று மீண்டும் மிரட்டினார்.

அதற்கும் தலையாட்டினாள். அப்போதைய அவளது மனதின் வேதனையை அவள்தான் அறிவாள்.

உடனே இருவரையும் எதுவுமே நடக்காததுபோன்று அப்பார்ட்மெண்ட்டிற்கு முன்பாக கொண்டு விட்டுவிட்டு மீண்டும் எச்சரித்து சென்றுவிட்டார்.

மித்ராவும் தூங்கிக் கொண்டிருந்தக் குழந்தையை தோளில் போட்டவாறே அப்பார்ட்மெண்டிற்குள் வர அங்கே மித்ரா, ருக்குமணி. தனம் என்று எல்லோரும் பதறிஅடித்துக் கொண்டு இவளுக்காக காத்திருந்து ஓடிவந்தனர்.

“எங்கடி போன உன்னை தான் ரெண்டு மணி நேரமா தேடிட்டு இருக்கோம் உன்னையும் சேர்த்து தொலைச்சுட்டமோன்னு பயந்துட்டோம்.

இப்போதான் மித்ரா மகனைக் காணலைன்னு தேடி அலைஞ்சு கண்டுபிடிச்சிருக்கோம்” என்று அழுதவாறே தனம் சொன்னார்.

“என்னாச்சுமா” என்று பதறிக்கேட்டாள்.

“அதையேன் கேக்குற நீ வெளியே போனதும் பேரனை வச்சுக்கிட்டு வ

வெளியே விளையாவிட்டு இருந்தன்னா திடீர்னு அவனைக் காணல. எங்க போனான்னும் தெரியலைனஎல்லாரும் தேடி அலைஞ்சோம். எங்கேயும் காணோம். போலீஸ்க்கு போகலாம்னு பார்த்தோம். அப்போதான் வாட்ச்மேன் தண்ணி திறக்கறதுக்காக மேல போனவரு புள்ள மொட்டை மாடியில் இருந்து விளையாடிட்டு இருந்ததா தூக்கிட்டு வந்தாரு”என்று அங்கு நடந்ததைச் சொன்னார்.

உடனே வாட்ச்மேனை நித்ரா திரும்பி பார்த்தாள் அவரோ எனக்கு எதுவும் தெரியாது என்பது போல நின்றிருந்தார்.

 நித்ராவுக்கு எல்லாமே புரிந்தது,குப்தா என்று ஒரு கொடூர மனுஷன் தனது குணத்தை காட்டிவிட்டார் என்று மனதளவில் நொந்துப்போனாள்.

அந்த நிமிடம்தான் ஆயுஷிடமிருந்து விலகவேண்டும் என்று முடிவை எடுத்திருந்தாள்.

அதன்பின் நடந்தது எல்லாமே குப்தாவின் திட்டம்தான்.அவர்தான் அவருக்கு தெரிந்தவர்கள் மூலமாக சென்னையில் வரன் பார்த்து அருணிடம் தரகரை அனுப்பியதே!

எல்லாவற்றையும் செய்தவர் தனது மகன் என்ன செய்வான்? என்பதைக் கணிக்கத் தவறியதால் நித்ராவே அவருக்கு மருமகளாக அவர் வீட்டிற்கே வந்துவிட்டாள்.